#kpybala #realhero
வழி காட்டுங்கள் இல்லை...வழி விடுங்கள்!
.
சென்னையை நினைத்தால் குலை நடுங்குகிறது. வந்தாரை வாழ வைக்கிற சென்னையா இப்படி? தண்ணீர் கேட்டால் சோறு தருவார்கள். சோறு கேட்டால் ஆடை கொடுப்பார்கள். ஆடை கேட்டால் அடைக்கலம் தருவார்கள். அப்படிப்பட்ட சென்னை இன்று, "கூலிக்கு கொலை செய்யும்" அறிவு சார் மன நோயாளிகளின் திடலாகிக் கிடக்கிறது. .
பெரிய ஊரில், சின்ன புத்தி கொண்ட மனிதர்களால், பாலா எனும் சிறு பறவை காயப்படாமலிருக்க இப்பதிவு!
தம்பி பாலா சின்ன நடுத்தரக் குடும்பத்துப் பையன். அவரது தந்தை இன்னும் பெட்ரோல் பங்கு ஊழியராக வேலை பார்க்கிறார். தாய் டைலர் வேலை செய்கிறார். இந்த வருமானத்தில்தான் இவர்களின் குடும்பம் நகர்கிறது.
சொந்த ஊரான நெடுங்காட்டுக்கு என் நண்பரது கலைநிகழ்ச்சிக்கு வந்த தம்பி அமுதவாணனிடம் பாலா வாய்ப்பு கேட்க, ''படிப்பை முடி. அப்புறம் நடி'' என்று கண்டிப்பாக கூறிவிட்டார். படிப்பிலும் பாலா சூரி! மாவட்ட அளவில் முதன்மை மாணவர் பட்டியலில் இடம் பெற்றார்.
அதன்பின் சென்னை வந்து, போராடி, விஜய் டிவியில் ஒரு அடையாளம் பெற்று சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறான்.
பாலாவின் பெற்றோருக்கு இருக்கிற வேலையில் சுய சம்பாத்தியம் இருப்பதாலும், திருமண விருப்பம் பாலாவுக்கு இல்லாததாலும் பாலாவின் வருமானத்தை அவர்கள் வீட்டுக்கு எதிர்பார்ப்பதில்லை. "பிள்ளைக்கு திருமண விருப்பம்தான் இல்லை. அவன் அளவுக்கு ஏதாவது செய்து சந்தோஷமாக இருக்கட்டும்" -என்பது தம்பி பாலாவின் பெற்றோரது வேண்டுதலாக நீடிக்கிறது.
கிராமத்தில் பிறந்த சின்ன மீன் குஞ்சு, ஓடை வழியாக ஆற்றைக் கடந்து, போராடி கடலில் கலந்து இருக்கிறது. நன்னீரில் நீந்திய மீன் கடல் உவர் நீரில் நீந்த வேண்டும். இனி கடல்தான் பாலாவின் வாழ்வு! அவனால், மீண்டும் ஆறு வழியே ஓடையில் நுழைய முடியாது. அப்படி யாராவது அவனை, கடலில் இருந்து பிடித்து ஓடைக்குள் விட முயலுவர்களேயானால் பாலாவின் எதிர்காலம் வடிவமிழக்கும்.
இதை நன்றாக உணர்ந்தே, கார்ப்பரேட் சினிமா கும்பல், "ஊடகக் கூலிப்படைகள்" மூலம், பாலாவின் நிஜ வடிவத்தை சிதைக்க திட்டமிட்டிருக்கின்றன. பாலா, சுயம்புவாக கலைஞன்! அவனது பயணத்தை கிராம தெய்வங்கள் ஆசீர்வதித்தே தொடங்கி வைத்திருக்கின்றன.
பாலாவை தமிழகத்தில் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களின் வீட்டு செல்லமாகவே கொஞ்சி. ஆராதித்து பூரிக்கின்றனர். காரணம், சினிமாவுக்கு வரும் முன்பே, தொலைக்காட்சிக்கு வரும் முன்பே பாலாவின் ஆதர்ஷ முன்னோடி மறைந்த தேசாபிமானி, APJ அப்துல்கலாம்! பள்ளிப் பிராயத்திலேயே அப்துல்கலாமையும், விவேகானந்தரையும் ஒரு சேர மனதுக்கு அமர அமர வைத்த அபூர்வ பிள்ளை அவன்!
எந்தச் சூழலிலும், வெளித் தாக்கங்களை உள் வாங்காத பூமியின் பாதாளம் அவன்! எந்த புகழ்ச்சிக்கும் அதிராத பிரபஞ்ச வேலை அவன்! அவனை காலமும், கடவுளும், அவனைப் புரிந்து கொள்கிற ஜனங்களும் விரைவில் அவனை ஒரு "தவிர்க்க முடியாத பிறவியாக" , தேசத்தோடு பிரிக்க முடியாத பிறவியாக அடையாளம் காட்டுவார்கள்.
பாலா அடிப்படையில் வாழ்வதற்குரிய தகுதிகளை பூரணமாகப் பெற்றவன். இசைக்கருவிகளை அசால்டாக கையாளும் திறமை கொண்டவன். நடிப்புடன் இசைத்த துறையிலும் பாலாவுக்கு நல்ல "பாண்டித்தியம்" உண்டு. சென்னையில் ஒளி உமிழும் மேடைகளில் பிரகாசிக்கும் பாலா, கிராமத்தில் அப்பாவின் பைக்கை எடுத்துக் கொண்டு, வீடு வீடாக தேவையறிந்து சேவையாற்றும் "நம்ம வீட்டுப் பிள்ளையாகவே" இன்னும் இருக்கிறான்.
கூலிக்கு மாரடிக்கிற, பாலாவின் வளர்ச்சியைப் பார்த்து பொருமுகிற, வெற்றியைக் கண்டு அஞ்சுகிற யாராக இருந்தாலும் இனி அவரவர் வேலைகளை பாருங்கள். தம்பி பாலா, யாருக்கும் தீங்கு நினைக்காத, உழைப்பை மட்டுமே நம்புகிற கலைஞன். கலையை ஆராதிக்கிற, கிடைப்பதை பிறருக்கும் பகிர்ந்து சேர்ந்துண்ணும் பறவையைப் போன்றவன்.
எந்திர கட்டிடங்களிலிருந்து, வீசப்படுகிற தந்திர குப்பைகளை பொன்னாக மாற்றும் வரத்தைப் பெற்றவன் தம்பி பாலா! நாள்பட்ட மாமிசம், கீழ்ப்பட்ட மதுவுக்கு அடிமையாகும் "ஊடக மன நோயாளிகள்" முதலில் உங்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.
பித்து தீரவில்லையென்றால், தம்பி பாலாவின் ஒரு கட்டிப்புடி வைத்தியம் போதும்! பைத்தியம் ஒழியும்! அப்படியும் முற்றிய பைத்தியமென்றால், பாலா கட்டப்போகிற மருத்துவமனையில் உங்களுக்கு சிபாரிசின்றி படுக்கைக்கு, சிகிச்சை, உணவு, பராமரிப்பு கிடைக்கலாம்.
பாலா, புதுச்சேரியின் கலை அடையாளம். பாலா எங்கள் மாநில முதல்வர் ரெங்கசாமிக்கு ஒரு கடிதம் கொடுத்தால் போதும். எங்களின் முதல்வர் ரங்கசாமி, ஒரு சர்வதேச மருத்துவமனையை நிறுவிக் காட்டுவார். பாலா, எங்கள் மாநிலத்தின் செல்லப் புதல்வன்!
திரைப்படக் கலைஞர்களையும், கலைஞர்களால் வாழவைக்கக் கூடிய தொழிலாளர்களையும் புதுச்சேரி மண் அன்போடுதான் வரவேற்று ஆசீர்வதித்து இருக்கிறது. நாங்கள் தமிழ் திரையுலக கலைஞர்கள் மீது பேரன்பு கொண்டவர்கள். அவர்களை ஆதரிக்கும் நல்ல ஊடகங்கள் மீது மாளாத நம்பிக்கை கொண்டவர்கள்.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், ராதிகா, லட்சுமி, கே.ஆர்.விஜயா, இசைஞானி, ரஹ்மான், அனிருத் மீதெல்லாம் வீசப்படாத கற்களா? அவர்கள் அவரவர்களது வேலைகளை மட்டுமே கவனித்து இன்று தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியாளராக நிற்கின்றனர்.
மக்கள் விரும்பும் ஒருவரது அடையாளத்தை சிதைக்க போராடும் எண்ணம் ஒரு மிகப்பெரிய மானுட பேரிடர்! அதை இனி செய்யாதீர்கள். பாலாவை விரும்பும் கோடிக்கணக்கான மனிதர்களின் பிரார்த்தனை உங்களை உருத்தெரியாமல் ஆக்கிவிடும்.
சிலரது வளர்ச்சி தென்னை மரத்தைப் போன்றது. வளர்ந்தாலும் காய்த்துக் கொட்ட இயலாது. தம்பி பாலா, யாருடனும் ஒப்பிட வாய்ப்பில்லாத அதிசயக் கலைஞன். அவன், சதுப்பு நிலத்தில் ஊன்றப்பட்ட சிறு வேர்! காடாக விரிவான். பசுமையாய் ஒளிர்வான். புலம்பெயர் பறவைகளின் அடைக்கல வனமாவான்.
அவனைப் பார்த்து பயப்படாதீர்கள். பாலா ஒரு இறை வரம் பெற்ற பிறவி. அவனை சந்தேகிக்காதீர்கள். அது உங்களால் மதிக்கப்படுவோரை சந்தேகிப்பதற்கு ஈடானது. பாலாவின் வாழ்க்கை இரகசியமற்றது. எல்லையற்ற வெளிப்படைத் தன்மை மிக்கது. நகருங்கள்! நகருங்கள்!! அவனுக்கு வழி விட்டு விலகுங்கள்!!!
அன்புடன்,
ஊர்க்காரன்-தம்பி மாரிமுத்து.