Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

#மருத்துவர் ஐயாவும்-என்.ஆர். ஐயாவும்!
PUDUCHERRY POLITICS
Thambi Marimuthu Oct 28 2025 தமிழக அரசியல்

#மருத்துவர் ஐயாவும்-என்.ஆர். ஐயாவும்!

#மருத்துவர் ஐயாவும்-என்.ஆர். ஐயாவும்!

.

தமிழகத்தில் முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்த நேரம் அது.  வன்னியர் சங்கம் சார்பில் மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 4 மாவட்டங்களில் 100 -க்கும் மேற்பட்ட ஊர்களுக்கு காரிலேயே சென்றார். அதுவும் அம்பாசிடர் கார்.


அப்போது நான் மிக இளைய பத்திரிகையாளன். மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்களுடன் காரில் பயணித்தபடி பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னைப் பற்றியும், எனது படிப்பு, குடும்பம் குறித்தும் அக்கறையாக விசாரித்தார். ஏனோ என்னை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. 


பயணத்தின் இடையிடையே இட ஒதுக்கீட்டு சாலை மறியல் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அவரவர் வீடுகளுக்கே செல்கிற மாதிரி அவரது பயணத் திட்டத்தை வடிவமைத்திருந்தார்கள்.


மாநில போலீஸ் ச.ராமதாஸ் ஐயா அவர்களை நெருங்க முடியாதபடி  ஐயா அவர்களுக்கும் மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பைத் தந்திருந்தது. பாதுகாப்பு விஷயத்தில் மாநில போலீசாருக்கும், மத்திய போலீசாருக்கும் போகிற இடங்களிலெல்லாம் மோதல், வாக்குவாதம், தள்ளுமுள்ளு நீடித்தது. ஒரு மத்திய ரிசர்வ் படை அதிகாரி மாநில போலீசாரை நேரடியாகவே எச்சரித்தார்.


"சென்ட்ரலில் அவருக்கு முழுமையான பாதுகாப்பு தரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் மீது ஈ அமர்ந்தாலும் சுடுவோம். எங்களுக்கு ஈயும், மாநில போலீசும் ஒன்றுதான்" என்றார்.  


போகிற இடங்களிலெல்லாம்,மருத்துவர் ச.ராமதாஸ் அவர்கள் தமிழக முதல்வராக இருந்த கலைஞரை கடுமையாக சாடினார். அவருக்கு ஒட்டு போட வேண்டாம். வந்தால் ...விரட்டி அடியுங்கள்" என்று பேசப்பேச, ஐயா போகிற இடங்களெங்கும், தானாகவே அவருக்கு பாதுகாப்புப்படை உருவானது. 


எங்கே வன்னியர் சங்கமும், தி.மு.கவும் மோதிக் கொள்ளுமே என்கிற பதட்டம் மாநிலம் முழுதும் சூழ்ந்திருந்தது. தி.மு.கவில் இருந்த வன்னியர் சமுதாய தலைவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்தனர். ''மருத்துவர் ஐயா கலைஞரை இந்த போடு போடுகிறார்? கலைஞருக்காக  மருத்துவர் ராமதாஸ் ஐயாவை பதிலுக்கு பதில் விமர்சிக்காமல் இருக்கிறோமே? கலைஞர் நம்மை என்ன நினைப்பார்?" என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.

 

கலைஞர் மிக நிதானத்தைக் கடைபிடித்தார். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நாளில் முதல்வர் கலைஞர், மருத்துவர் ஐயா கூட்டங்கள் நடந்தன. இரு தரப்பும் ஆவேசத்திலும், நிதானத்தைக் கடைபிடித்தனர். 


மாநில போலீசார் மருத்துவர் ஐயாவை கைது செய்ய காத்திருக்க, ஐயாவைச் சுற்றி முதல் வட்டம் இயந்திரத் துப்பாக்கியுடன் மத்திய Z பிரிவு  போலீசார், பாதுகாப்பளித்தனர். இரண்டாவது வட்டத்தில் வன்னியர் சங்கத்தின் பாதுகாப்பு படை சபாரி சூட், ஷூ, குண்டாந்தடி, நீண்ட டார்ச் லைட்டுடன் நின்றனர்.


இந்த இரு வட்டங்களைத் தாண்டி, எங்காவது ஒரு இடத்தில் மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களை கைது செய்ய வேண்டும் என்கிற கவனத்துடன் தமிழக காவல்துறை வாகனங்களில் கூடவே வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், எங்கும், எப்போது மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்களை தமிழக போலீசாரால் நெருங்கவே முடியவில்லை.


ஒரு வினாடி கூட தனது பிரச்சார வேகத்தை, பயணத்தை, பேச்சின் விறுவிறுப்பை அவர் குறைக்கவேயில்லை. தனக்கே உரித்தான ஸ்டைலில் அவர் பேசப்பேச, பாட்டாளி சொந்தங்கள் ஆர்ப்பரித்தனர்.

நான் அவரை பேட்டியெடுக்க வைத்தீஸ்வரன் கோயிலில் நெருங்க, மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்கள் திட்டமிட்டபடி தனது காரில் என்னை ஏற்றிக் கொண்டார். 


தமிழகம் முழுவதும் தொடர்ந்து 10 நாட்கள் காரில் பயணிப்பதே பெரிய சவால்! மனிதர், முழுமையாக சாப்பிடாமல், காரிலேயே சென்று கொண்டிருந்தார். அவரது கார் நிற்கிற ஓவ்வொரு பாயிண்டிலும் நள்ளிரவாக இருந்தாலும் ஆண், பெண், குழந்தை என்று குறைந்தது 10,000 பேருக்கு குறையாமல் காத்திருந்தார்கள். 


ஒரு சின்ன நெரிசலோ, தள்ளு முள்ளோ நடக்கவில்லை. அனைவருமே சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதை பார்க்கும்போது ஆச்சரியம் மேலிட்டது. அவரோடு காரின் உள்ளே உட்கார்ந்திருந்தேனே தவிர அவரை பேட்டியெடுக்க பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. 


வழி நெடுக பாட்டாளி சொந்தங்கள் காரை நிறுத்தி, அவருக்கும், அவருடன் ரயில் போல பயணித்த நூற்றுக் கணக்கான அம்பாசிடர் கார்கள், ஸ்டாண்டார்டு வேன்கள், என்பீல்டு பைக்குகளில் பயணித்தவர்களுக்கு பானகம், இளநீர், வாழைப்பழம், நிலக்கடலை என்று அதம் பண்ணிக் கொண்டிருந்தனர்.


நான் அந்த வயதில் 5 வேளை சோறு போட்டாலும் தின்று செரிக்கிற  வயதில் இருந்தேன். ஆனால், மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்களின் காரை விட்டு இறங்கவும் முடியாமல், பயணித்தால்தான் பேட்டி என்று கட்டாயத்தில் போய்க் கொண்டிருந்தேன்.   


எனது அவஸ்தையைப் பார்த்த மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்கள், காரில் தான் வைத்திருந்த பிளாஸ்க்கிலிருந்து ஆட்டுப்பால், டப்பாவிலிருந்து நிலக்கடலையை தந்து பசியாற்றினார். மயிலாடுதுறை, மங்கநல்லூர், பேரளம், சன்னாநல்லூர் என்று கார் பேரணி போய்க் கொண்டிருந்தபோது, தமிழக போலீசாரின் கார்கள் வயலுக்குள் பாய்ந்து ரோட்டில் ஏறின.


மத்திய பாதுகாப்பு படையினர் தமிழக போலீசாரை சுற்றி வளைத்தனர். "ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது" என உள்மனதில் படபடப்பு தொற்றிக் கொண்டது. அந்தநேரம், காருக்குள்ளிருந்து மருத்துவர் ச.ராமதாஸ்  ஐயா அவர்களை விட்டு இறங்கிப் போக விருப்பமில்லை.


"அவங்கள இப்போதான் பாக்குறே. பத்து நாளா இந்தக் கூத்துதான் நடக்குது. எவனாவது வருவான், கைது பண்ணுவான்னு பாத்தா, ஒன்னும் நடக்க மாட்டேங்குது" என்று அவர் சிரிக்க, வியப்பாய் அவர பார்த்தேன். பத்து நாட்கள் பயனாக களைப்பே அவரிடம் இல்லை.


திருவாரூர், கூத்தூர், கீவளூர், தாண்டி தேவூரில் அவர் காரிலிருந்து இறங்கி வன்னியர் சங்கத் கொடி ஏற்றியபோது இரவு 11 மணியாகிவிட்டது. அந்த இரவிலும் மண் தரையில் வாழையிலை போட்டு, நாட்டுக்கோழி வறுவல், குழம்பு,  சுடச்சுட சோறு போட்டார்கள்.


 ஏதோ குலதெய்வ கோயிலில் வழிபாட்டு திருவிழாவின் அதிர்வு இருந்தது.

காரிலிருந்து இறங்கி, ஒரு திண்ணையில் போய் அமர்ந்தார் மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்கள். அவர் சாப்பிடவில்லை. 

"நெருங்கிப்போய் உங்களுக்கு பசிக்கலையா?" என்றேன்.


"பசி எப்போ வரும் தெரியுமா? இந்த குரலற்ற ஜனங்களுக்கு என்றைக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறதோ, அப்போதுதான் எனக்கு நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு இருக்கும். ரத்தம் சுண்டுற வரைக்கும், அது வத்திக் காஞ்சி, நா ஓடா ஒடுங்குற வரைக்கும் ஓட்டத்தை நிறுத்த மாட்டேன்" என்றபோது, என்றார்.


அதற்குப்பின், அவர் என் மீது காட்டிய நம்பிக்கை, பேரன்பு, உரிமை காரணமாக தைலாபுரம் தோட்டத்தில் நிறைய இருக்க வேண்டியிருந்தது. பல முக்கிய அரசியல் முடிவுகளில் உடனிருந்தேன். பசியால் என்னை வாட விடமாட்டார். "போய் சாப்பிடுங்க. அப்புறம் வேலைய பாக்கலாம்" என்பார். 


தொடர்ந்து அவர் புதுச்சேரியில் பெரும்பான்மை வன்னியர்களை நம்பி, கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு ஆட்சியமைக்கும் முடிவெடுத்தபோது கவலைப்பட்டேன். 


என்கவலையை மருத்துவர் ச.ராமதாஸ் ஐயா அவர்களிடம் சொன்னபோது, "எதுவும் வெளைச்சலா கெடைக்காது. நிறைய பண்ணனும். மொதல்ல உழுது, எரு போடணும். அப்புறம் விதையை தூவணும். புதுச்சேரி நல்ல நிலம். ஆனா, அது, மிராசுதார்கள் கிட்ட சிக்கியிருக்கு. வெற்றியோ, தோல்வியோ, தொழிலாளிகள் கிட்ட மீட்டு கொடுக்கணும்"   என்றார்.


மாநில மாநாடு, தொகுதி மாநாடு, மகளிர் மாநாடு என்று அவருடை ஆலோசித்து வடிவமைத்தேன். மாநில முழுக்க பயணித்தேன். உள்ளூர் நிலவரம், மாநில நிலவரம், தேசிய நிலவரம் என்று புள்ளி விவரங்களை தட்டச்சு செய்து தந்தேன்.


எல்லாம் ஒழுங்காகத்தான் நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.கோவிந்தராஜனை அழைத்து வந்தேன். தொடர்ந்து பேராசிரியர் ராமதாஸ், ஜட்ஜ் கோவிந்தராஜ், முன்னாள் அமைச்சர் மணிமாறன், கம்யூனிஸ்ட் கட்சியின் மஞ்சினி, முன்னாள் எம்.எல்.ஏ தெய்வநாயகம் போன்றோர் பாமகவில் இணைந்தனர். 


பாமகவின் பிரச்சாரம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசுக்கு பெரிய தலைவலியாகவும், சவாலாகவும் முளைத்தது. அன்றைய காங்கிரஸ் தலைவரும் எனது தந்தையின் நண்பருமான ப.சண்முகம் என்னிடம் கடிந்து கொண்டார். "என்னய்யா நீங்க. உங்ககிட்ட  விளையாட்டுக்கு சொல்லப்போயி இப்பேர்ப்பட்ட நெருக்கடியை கொண்டாந்துடீங்க" -என்றார்.


கடற்கரை சாலையில் முன்னாள் முதல்வரும் இப்போதைய எம்பியுமான வைத்திலிங்கம், அனந்தபாஸ்கரன், விநாயகமூர்த்தி போன்றோர் முன்னிலையில் தலைவர் சண்முகம் என்னிடம் இப்படிக் கேட்டார்.  

"என்னய்யா டாக்டர் ராமதாசு பாண்டிச்சேரியில் படையாச்சி ஆளுங்கள  தெரட்டி ஆட்சியப் புடிக்க போறேங்கிறாரே? சூடு, சொரணை உள்ள காங்கிரசுக்காரன் அந்தக் கட்சிக்கு போவானாய்யா?" என்றார்.


அவர் என்னை கிண்டல் செய்வதற்காக அப்படிப் பேசப் போக, அவரது கட்சியின் பொதுச் செயலாளரும் படையாச்சி சமுதாயத்தைச் சேர்ந்தவருமான கேஜி என்கிற கே.கோவிந்தராஜன் புதுச்சேரியில் பாமகவில் ''முதல் என்ட்ரி'' ஆன திருப்பதிக்கு பிள்ளையார் சுழியைப் போட்டேன்.   


அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் பாமகவில் இணைந்த பிரமுகர்கள் அன்றைய ஆளுங்கட்சியாக காங்கிரசுக்கு சிம்ம சொப்பனமாகிப் போனார்கள். என்னை கோட்டுச்சேரி தொகுதியில் நளமகாராஜனுக்கு எதிராக களமிறங்க வாய்ப்பு உருவானபோது அதை தவிர்த்தேன். 


எனக்கு பதில் பேராசிரியர் ராமதாஸை பரிந்துரைத்தேன். அவர் நின்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அடுத்தது வந்த பாராளுமன்றத் தேர்தலில் பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. மீனவ சமுதாயத்தவரும், தலைசிறந்த பொருளாதார நிபுணருமான பேராசிரியர்.ராமதாஸ் பாமக எம்பியாக டெல்லி போனார். 


புதுச்சேரியில் பாமக உருவாக்கிய வன்னியர் வாக்கு வங்கி அன்றைய தேர்தலில் பாமகவுக்கு பயன்படாமல் போயிருக்கலாம். ஆனால், வன்னியர் வாக்கு வங்கி இன்றுவரை வன்னியரான ரங்கசாமி, நமச்சிவாயம் அரசியலில் நீடிக்க வாக்கு வங்கி முதலீடாக நீடிக்கிறது. 


வன்னியர் வாக்கு வங்கியை அடித்தளமாக்கி அதிகார பீடத்தில் இருக்கிற ரங்கசாமி, நமசிவாயத்தால் அச்சமுதாயத்தினருக்கு காது விடைக்கிற அளவுக்கு பெருமைதான். ஆனால், அச்சமுதாயத்தினர் கண்ட பலன்? என்ன என்பதை இதை படிக்கிற அவரது ஆதரவாளர்கள் இங்கு பதிவிடக் கூடும்! 


-தம்பி மாரிமுத்து.