காரைக்காலில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
காரைக்கால்,செப்.28:
காரைக்கால் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்களில் தொடங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தார்.மேலும் கூட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன்(வருவாய்),துணை மாவட்ட ஆட்சியர் வெங்கடகிருஷ்ணன் (பேரிடர் மேலாண்மை),காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன்(தெற்கு) மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் சந்திரபிரியங்கா பேசியதாவது :-
தாழ்வான பகுதிகள் எவை என்பதை முன்கூட்டியே கண்டறிந்து,மழைநீர் தேங்காத அளவிற்கு சரி செய்ய வேண்டும்.பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப் படாத வகையில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து,தேவையான அளவு குளோரின் கலந்த குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.குடிநீர் தொட்டியில் போதுமான அளவு ஜெனரேட்டர் வசதிகள் செய்ய வேண்டும்.
வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாத வண்ணம் தூர்வார வேண்டும்.விவசாய நிலங்களில் பாசன வாய்க்கால்களை அடைப்பு ஏற்படாத வண்ணம் முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.பொதுப்பணித்துறை நீர் மட்டம் குறித்து அனைத்து ஆறுகளையும் கண்காணிக்க வேண்டும்.
கறி கடைகள், மீன் கடை உள்ளிட்ட கடைகளில் பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிகமாக பரவுவதால் வாய்க்காலில் அடைப்பு ஏற்படுவதால் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.தாழ்வாக உள்ள மின் கம்பிகளை சரி செய்ய செய்து,சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு கடும் மழை ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்று தங்கும் வசதிகள்,கழிப்பறை வசதிகள்,குடிநீர் வசதிகள் உணவுகள் ஏற்பாடு செய்யப்படும்.
மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கூறுகையில் சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் படியும்,மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.