Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மலர்ச்சியில் எய்ம்ஸ்-மயக்கத்தில் ஜிப்மர்!
மலர்ச்சியில் எய்ம்ஸ்-மயக்கத்தில் ஜிப்மர்!
THAMBI MARIMUTHU Aug 14 2025 புதுச்சேரி அரசியல்

மலர்ச்சியில் எய்ம்ஸ்-மயக்கத்தில் ஜிப்மர்!

மலர்ச்சியில் எய்ம்ஸ்-மயக்கத்தில் ஜிப்மர்!


 மதுரையில் "செங்கல்" அடையாளத்துடன் விமர்சிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்ற ஒரு மகிழ்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது.


 ஆனால் எய்ம்ஸ்சுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையில் இன்னும் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படவில்லை. அதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது மத்திய மாநில அரசுகள் மீதான நம்பிக்கையை மக்கள் மனதில் குலைத்திருக்கிறது. 


புதுச்சேரியில் மாறி மாறி ஆட்சியைப் பிடித்து, சுக போகங்களுடன் வலம் வரும் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை பற்றி சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் மட்டும் முணுமுணுத்து அமைதியாகி விடுகின்றன.


காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக 2014 மார்ச் 3 அன்று ONGC நிதியுதவியுடன் கூடிய காரைக்கால் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டது. 


சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான முதற்கட்ட நிதியாக ரூ 45 கோடி காரைக்கால் பொதுப்பணித்துறை நிர்வாகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அப்போது முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இதற்கான உள்கட்டமைப்பு வரைப்படங்கள் மற்றும் டிசைனிங், கட்டுமான ஓப்பந்தப்புள்ளி கோருதல் போன்ற அனைத்தும் விரைந்து செயல்பட தொடங்கியதாக கூறினார்.


ஆரம்ப கட்டமாக ஒரு கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்தக் கட்டிடத்தை புதுச்சேரி அரசு மதர் தெரசா நர்சிங் பள்ளிக்கு தந்தனர். எதிர்புறமிருந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான இடத்தை ஜிப்மரிடம் கொடுத்தது விட்டனர். 


அதன் பின் மத்தியில் 26.05.2014 -இல் பாஜக ஆட்சி அமைத்தது.

தேஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கூட்டாளியாகவும் இருந்தது. 


புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் டயாலிசிஸ் பிரிவு தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியபோது, " காரைக்கால் பகுதியில் 50 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் திட்டத்திற்கான டெண்டர்கள் விரைவில் வெளியிடப்படும்" என்றார். 


2006-2007 பட்ஜெட்டில் அறிவித்து, காரைக்காலில் 750 படுக்கைகள் கொண்ட ஒரு தரமான நவீன சூப்பர் ஸ்பஷாலிட்டி மருத்துவமனையை  முதல்வர் ரங்கசாமி நிலைத்தன்மை கட்டியிருக்கலாம். அல்லது 'கிழடு தட்டிய அரசு பொது மருத்துவமனை கட்டிடத்தை' இடித்துவிட்டு, புதிய கட்டிடத்தைக் கூட இந்நேரம் கட்டியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. முதல்வர் ரங்கசாமி சொன்னதோடு சரி. அந்த அறிவிப்பின் மீது ஆவர் எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை.  


செய்ய வேண்டியதை விட்டு விட்டு, "பாடைக்கு ஒப்பனை" செய்வதற்கு ஈடாக, தினமும் தரையை உடைப்பதும், மார்பில் பதிப்பதும், சுவர்களை இடிப்பதும், டைல்ஸ் ஓட்டுவதுமாக இருக்கிறார்கள். ஆக கோடிக்கணக்கான நிதியை விஞ்ஞான ரீதியில் திருடி விட்டனர். இதை காரைக்காலில் 5 எம்.எல்.எக்களில் ஒருவர் கூட கேட்கவில்லை. 


கடந்த பல வருடங்களுக்கு முன், இதே மருத்துவமனையின் அவலத்தைக் கண்டித்து மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரகாசு மருத்துவமனைக்குள் நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். PRN நளமகராஜன் எம்.எல்.ஏ., மருத்துவமனைக்குள் போராட்டம் செய்தார். தனது தொகுதி பெண் இறந்ததைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் சந்திரப்பிரியங்கா சாலை மறியல் செய்தார். 


நிரவியில் சாலை விபத்துக்குள்ளான நோயாளிக்கு சிகிச்சை தரத்தைக் கண்டித்து, மாவட்ட காங்கிரஸ் தலைவர் RP சந்திரமோகன் தலைமையில் அரசு மருத்துவமனைக்கு முன்பு நூற்றுக் கணக்கானோர் சாலை மறியல் செய்தனர்.  


காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் யோக்கியத்தை தெரிந்து மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திரகாசு, ஜுரத்துக்குக் கூட இங்கு அண்டியதில்லை. இறக்கும் வரையில் தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார். 


மறைந்த முன்னாள் முதல்வர் ப.சண்முகமும் எதற்கும் லாயக்கற்ற இந்த அரசு மருத்துவமனையில் தேவையான சிகிச்சை இன்றியும், வெளி மருத்துவமனைக்கு அனுப்பப்படாமல் நேரத்தை வீணாக்கியும் உயிரை விட்டார். 


அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், அரசு உயரதிகாரிகள், அரசு ஊழியர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என நூற்றுக் கணக்கில் செத்து மடிந்தும், புதுச்சேரி அரசியல்வாதிகள் இன்று வரை, கண்டு கொள்ளவே இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும், "ஆபத்பாந்தவன்" அவதாரிகளாக பிரச்சார வேன்களில் வந்து செல்கின்றனர்.


''நாடக அரசியல்'' நடத்தும் இந்த சுயநல வேடதாரிகளை ஒதுக்கி, காரைக்காலுக்கென ஒரு கட்சியை உருவாக்கி நேர்மையான 5 மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கவும் நன்கு படித்த, இலக்கணமாய் பேசுகிற காரைக்கால் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வும் இல்லை. 


 அன்றைய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா, மத்திய அமைச்சராக இருந்த நாராயணசாமி, மாநில முதல்வர் ரெங்கசாமியால் செங்கல் வைத்து துவக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பலவருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டமாகும். 


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் வேகமெடுத்த செய்தி புதுச்சேரி மக்களை எட்டாதது துரதிஷ்டம்! காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கட்டிடம் முழுமையாக முடிந்தும், மருத்துவக் கல்லூரி மட்டுமே இயங்குகிறது. புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்படவில்லை.


வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு சீவி, சிங்காரித்துக் கொண்டு ''புதுச்சேரி மாப்பிள்ளைகள்'' வருவார்கள். கூடவே மாப்பிள்ளைத் தோழர்களும் வருவார்கள். மாப்பிள்ளைகள் வீர வசனம் பேச, தோழர்கள் கைதட்டி கூவுவார்கள். 


கவர், சேலை, பரிசு, டோக்கன், சரக்குக்கு தொன்னாந்து நிற்கும் திருவாளர் பொது ஜனங்களும் "ரேட்டுக்குத் தகுந்த ஓட்டை" போட்டு ஜனநாயகக் கடமையற்றத்தான் போகிறார்கள். வெளியோர்களிலிருந்து ரயில் வழியாக பிச்சையெடுக்க நூற்றுக்கணக்கில் வருகிறார்கள். சம்பாதித்ததை குடித்து போக பண எந்திரம் வாயிலாக வீட்டுக்கு அனுப்பும் அறிவு அந்தப் பிச்சைக்காரர்களுக்கு இருக்கிறது. 


ஆனால், புதுச்சேரியிலிருந்து வந்து கொடுக்கிற பிச்சையை, உள்ளோரிலிருந்தபடியே கையேந்தி வாங்கும் பிச்சைக்காரர்களாக நம்மை அரசியல்வாதிகள் மாற்றி வைத்திருக்கிறார்கள். இது இந்தத் தேர்தலில் மாற வேண்டும். 


காரைக்கால் மாவட்ட மக்கள் பிச்சை எடுக்கும் சிந்தனை தங்கள் மீது திணிக்கப்படாமல், எச்சரிக்கையாக சிந்திக்க வேண்டும். நமது முடிவுகளை எங்கிருந்தோ, யாரோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி ஒரு தீர்ப்பை 2026 சட்டமன்றத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் இருக்கிற மக்களும் எடுப்பார்களா? 


-தம்பி மாரிமுத்து.