Saturday 07 03 2026

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பாஜகவுக்கு மியூசியம்-புதுச்சேரி அதிசயம்!
பாஜகவுக்கு மியூசியம்-புதுச்சேரி அதிசயம்!
THAMBI MARIMUTHU Oct 17 2025 புதுச்சேரி அரசியல்

பாஜகவுக்கு மியூசியம்-புதுச்சேரி அதிசயம்!

பாஜகவுக்கு மியூசியம்-புதுச்சேரி அதிசயம்!


புதுச்சேரியில் சாமிநாதன் மாநில பாஜக தலைவராக இருந்தபோது, மாநிலத்தின் எல்லா பகுதிகளுக்கும் நேரடி விசிட் செய்தார். வீடு வீடாக சென்று மக்களிடம் உரையாடி கட்சி உறுப்பினர் சேர்த்தார். சாமிநாதரின் ஆதரவாளர்கள் என்று கூறப்பட்ட பெரும்பாலான கொஞ்சம் கொஞ்சமாக பாஜக நிரந்தர உறுப்பினராக மாறினார். புதுச்சேரியில் 2016 சட்டமன்ற தேர்தலில் நாராயணசாமி முதல்வராவதற்கு சாமிநாதனின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பா.ஜ.கவுக்கு நியமன உறுப்பினர் ஒதுக்கீடு விஷயத்தில் காங்கிரஸ் நீக்குபோக்காக நடந்து கொண்டது. இதற்கு காரணம் அன்றைய முதல்வர் நாராயணசாமி, மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் இடையே இருந்த புரிதல்தான்.

தொடர்ந்து மீண்டும் பாஜக தலைவராக சாமிநாதன் பதவியை  நீட்டிக்கப்பட்ட தினம் நாராயணசாமி என் பெயர் அடிபட்டது. தனது நெருங்கிய நண்பர் சந்தோஷிடம் சாமிநாதனே ஒரு பெண் பிரதிநிதி மூலம் நாராயணசாமி பரிந்துரைத்ததாக அப்போது பேச்சு அடிபட்டது. 

சாமிநாதன் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்த போது நாராயணசாமி என் ஆட்சி குறித்து முரட்டுத்தனமான இந்த போராட்டத்தையும் அவர் கருதவில்லை. பாம்பும் சாகாமல், கம்பும் முறியாமலேயே  சாமிநாதனின் போராட்டங்கள் நீடித்தன.

அதே நேரம் சாமிநாதனுக்கு மாற்றாக ரங்கசாமி மூலம் பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்தான் கல்வியாளரும், சாமிநாதனின் அதே முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவருமான  செல்வகணபதி! அதுபோல் ராஜ்யசபா எம்பி தேர்வு செய்யப்பட்டபோது ரங்கசாமியின் நண்பரும் முன்னாள் எம்பி மாண ராதாகிருஷ்ணன் பெயரும், என் ஆர் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் பெயர்கள் அரசல் புரசலாக அடிபட்டன. இருந்தும் செல்வ கணபதி ரங்கசாமி தேர்வு செய்யும் போது அவரது ராஜதந்திரம் வெளியானது.

நாராயணசாமிக்கு விசுவாசமாக உள்ள சாமிநாதன் இனி புதுச்சேரி அரசியலில் இருக்கவே கூடாது என்று முடிவு செய்தார் ரங்கசாமி. இப்போது மாநில தலைவர் பதவியில் இருந்தும் வெளியேற்றப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட சாமிநாதன் கட்சியில் இருந்து வெளியேறிப் போனார். இந்த எச்சரிக்கை சாமிநாதனுக்கு மட்டுமல்ல. தலைக்கு விசுவாசம் இல்லாத எவருக்கும் இதே கதி தான் என்பதை சொல்லாமல் சொன்னார் ரங்கசாமி.

துவக்கத்தில் புதுச்சேரி திமுகவில் இளைஞர் அணி பொறுப்பில் இருந்து, கட்சிக்குள் அதீத நாட்டாமை செய்ததால் திமுகவை விட்டு வெளியேற்றப்பட்டவர் ஏம்பலம் செல்வம். புதுச்சேரி மாநிலத்தில் ரங்கசாமி அரசின் துவக்கத்தில், மருத்துவக் கல்லூரி பொறியியல் கல்லூரி படிப்புக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா ஒரு துருப்புச் சீட்டாக அமைந்தது. 

அந்த நேரம் புதுச்சேரியில் அங்கீகாரம் இல்லாத அடியாபட்டியா என்ற விளையாட்டுக்கான சான்றிதழ்கள் ஏராளமாக மருத்துவ கல்லூரி பொறியியல் கல்லூரி இட ஒதுக்கீட்டை ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் பெறுவதற்கு பயன்பட்டன. பல மாநிலங்களில் விளையாட்டில் அங்கீகரிக்கப்படாத இந்த விளையாட்டு, புதுச்சேரியில் மருத்துவ கல்வி, பொறியியல் கல்வி இடங்களை பெறுவதற்கு வணிக ரீதியில் பெரிதும் உதவின. இதுகுறித்த புகார்கள் ஆதாரங்கள் சிபிஐ வசம் இன்னும் கட்டு கட்டாய் உள்ளன.

திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ரங்கசாமி அலதாவியாக இருந்த என் குலம் செல்வத்துக்கு வாழ்வளிக்க முடிவு செய்த ரங்கசாமி, அவரை பாஜகவில் சேர வைத்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார். அப்படியும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அவ்வப்போது ஒரு மோதல் போக்கை ஏம்பலம் செல்வம் கடை பிடித்தார். 'கோழி பிரியாணி நிருபர்கள் சங்கம்' ஒன்றை தனக்கு ஆதரவாக உருவாக்கினார் ஏம்பலம் செல்வம். திறமையும், அனுபவமும், நேர்மையும் உள்ள நிருபர்கள் அவமதிக்கப்பட்டனர்.

'கோபிநிச' குரூப், சட்ட மன்றத்தை தனதாக்கியது. சட்டமன்ற வளாகத்துக்குள் பத்திரிகையாளர் சங்கத் தேர்தலை நடத்த சபாநாயகர் பெயரை,  'கோபிநிச' குரூப் பயன்படுத்தும் அளவுக்குப் போனது.     வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகர் இருக்கையை தேடி முதல்வர் அமைச்சர்கள் வந்த மரபை அப்படியே உல்டா செய்து, ஏம்பலம் செல்வம் முதல்வர் அமைச்சர்களின் அறைகளில் உட்கார்ந்து ஒரு விவாதப் பொருளாகி போனார்.

ஒரு கட்டத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திற்கு எதிராக வாயில் படியில் அமர்ந்து போராட்டங்கள் நடக்க முதல்வர் ரங்கசாமிக்கு சொல்ல முடியாத சங்கடம்! இது எப்படி சமாளிப்பது என்று பொறுத்திருந்த ரங்கசாமி, தற்போது நிலவும் பாஜக உட்கட்சி பூசலில் சபாநாயகர் செல்வத்தையும் சுற்றிவிட்டு ரசிக்கிறார் என்று சட்டமன்ற வளாகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இனி யாரை சார்ந்தும் நின்றால் கதைக்காகாது என்று நினைத்த ஏம்பலம் செல்வம், தன்னோடு நெருக்கமாக இருந்த முன்னாள் மாநிலத் தலைவர் செல்வகணபதி விட்டு சற்று விலகி புதிய மாநில தலைவர் சப்தகிரி இராமலிங்கத்திற்கு நெருக்கமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், நமச்சிவாயம் முதல் வேட்பாளராக பாஜகவால் முன்மொழியப்பட்டார். தேர்தல் முடிந்ததும் முதல்வர் கனவில் இருந்த நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவியை பாஜக தலைமை கோரியது.

இதற்கு நீண்ட மௌனம் சாதித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் துணை முதல்வர் அந்தஸ்தில் நமச்சிவாயத்தை உள்துறை அமைச்சர் ஆனார்.  முதல்வர் ரங்கசாமி தனது மருமகனுக்கு முக்கியமான இலாகாக்களை ஒதுக்கினார். அன்று முதல் மருமகன் நமச்சிவாயம் மீது ரங்கசாமி ஒரு கண் வைக்கத் தொடங்கினார்.

வேலி காலில் முருங்கை மரம் இருப்பது நல்லது தான். அதிகமாக காய்த்து, ஊர்வம்பை விலைக்கு வாங்கினால் கிளைகளை வெட்டுவது இல்லையா? உரிய சந்தர்ப்பம் பார்த்த ரங்கசாமி, நமச்சிவாயம் என்ற அழுத்தமிக்க பாரமானியின் பாதரசத்தை சற்று குறைத்தார். அதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு யாரும் முன் வராத நிலையில்,  நமச்சிவாயம் களத்தில் இறக்கி விடப்பட்டார். இதில் "முதல்வர் ரங்கசாமியின் ரோல்" அதிகம் என்று அப்போது பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற, கலங்கிய விழிகளோடு உள்துறை அமைச்சர் பதவியில் நீடித்தார் நமச்சிவாயம். என்னதான் உறவினர் என்றாலும், அரசியல் என்று வரும்போது அளந்துதான் வளர வேண்டும் என்ற பாடம் நமச்சிவாயத்திற்கு புரிந்தது. அது புரிந்த போது நமச்சிவாயத்தின் மாநில தலைவர் பதவி கைமாறி செல்வ கணபதிக்கு போனது. 

அன்றும் இன்றும் கரை வேட்டி கட்டாத என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகராகவே முதல் ரங்கசாமியை செல்வகணபதி வலம் வந்து கொண்டிருக்கிறார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா nr காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாக வலம் வந்தவரே அவருக்கு பிரச்சனை இல்லை. அவர் மீது எந்த புகார்கள் சென்றாலும் முதல்வர் ரங்கசாமி அதை கண்டு கொண்டதுமில்லை அவரை கண்டித்ததும் இல்லை. தனக்கு பிரியமான சீனியர் சந்திரகாசுவின் மகள் என்கிற தனி பிரியமும் சந்திர பிரியங்காவை ரங்கசாமி மகள் போல் நடத்துவதற்கு காரணமாக அமைந்தது.

ஆனால் விதி வலியது! எல்லாருக்கும் காங்கிரஸ் கூடாரத்தில் இருந்து கொண்டே, பாஜக லாகி செய்த சந்திர பிரியங்காவின் சேட்டை ரங்கசாமிக்கு எரிச்சல் ஊட்டியது. அவ்வப்போது புதுச்சேரி விஜயம் செய்யும் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் முருகனை சந்திப்பதும், திரும்புவதுமாக சந்திர பிரியங்காவின் நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உள்ளாகின. அந்த சந்திப்பில் அவரது உரையாடல்கள் அத்தனையும் முதல்வரின் டேபிளுக்கு வந்து சேர்ந்தன. 

இறுதியில் சப்பில்லாத  தனிப்பட்ட ஒரு காரணத்துக்காக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் சந்திர பிரியங்கா! அவர் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவிக்கு, துணை சார்பாக ராஜவேலு நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பக்கத்தில் இன்னொரு கோடு போட விரும்பிய ரங்கசாமி, பாஜக எம்எல்ஏவான சாய் சரவணன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் பதவி வழங்கினார்.

புதுச்சேரி அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த சாய் சரவணன் மீது துவக்கத்திலேயே ரேஷன் அரிசி ஊழல் புகார்கள் எழுந்தன. அத்துறையின் இயக்குனராக சாய் சரவணனின் சகோதரர் இளங்கோவன் நியமிக்கப்பட்ட போது கடும் ஆட்சேபங்கள் எழுந்தன. அமைச்சரின் சகோதரர் என்பதற்காகவே அத்துறையில் பதவி உயர்வுக்காக காத்திருந்த அதிகாரிகளை தாண்டி, இளங்கோவனுக்கு இயக்குனர் பதவி தரப்பட்டதாக பகிரங்கமாக பலரும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் , தான் தீவிர இந்துத்துவா கொள்கை கொண்டவர் என சாய் சரவணன் தன்னை பிரகடனப்படுத்த, முதல்வர் ரங்கசாமியின் கவனம் அவர் மீது திரும்பியது. தொடர்ந்து சாய் சரவணன் அடிக்கடி டெல்லி செல்வதும் அங்கு பாஜக முக்கிய தலைவர்களை சந்திப்பதும் புதுச்சேரி திரும்பி, சுயம்புவாக பேட்டி அளிப்பதுமாக இருந்ததும் முதல்வர் ரங்கசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன் இடையே, கருத்து வேறுபாடுகள் முளைத்தன. அவை முதல்வரின் கவனத்திற்கும் சென்றன.

காமராஜர் நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காத ஆற்றாமையால், ரங்கசாமி ஆட்சி அமைவதற்கு ஒத்துழைத்த சுயேச்சைகளை கூட்டு சேர்த்துக் கொண்டு போர்க்குரல் எழுப்பியபடி இருந்தார்.  ஆனால் அவர் எதிர்பார்த்த அமைச்சர் பதவி திசை திரும்பி சாய் சரவணன் ருசிப்பதற்காக சென்று சேர்ந்தது. பொறுமை இழந்த ஜான்குமார், தனது மாஜி லாட்டரி  முதலாளியின் மகன் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரிக்கு இறக்குமதி செய்தார்.

முதலில் அவருக்கு சமூக சேவகர் கவசத்தை மாட்டிவிட்டு, தனது தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்க வைத்தார். எதிர்பாராத விதமாக அத்தொகுதியில் பாஜக பிரமுகர் உமாசங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட, அச்சத்தில் உறைந்த சார்லஸ் சற்று அடக்கி வாசித்தார்.   ஆரம்பத்தில் பாஜக பிரமுகராக தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டு, ஜான்குமாரை கேடயமாக வைத்து, முதலியார் பேட்டை உசுடு உப்பளம் என்று நகரத் தொடங்கினார்.

லோக்கல் பத்திரிகைகளில் சார்லஸின் புராணங்கள், மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி போல வந்த வண்ணம் இருந்தன. வரலாற்றுப் பாடத்தில் "அசோகன் புளிய மரங்களை நட்டார். ஏரிகளை வெட்டினார்" என்று இருக்கும். அதுபோல், சார்லஸ் சாக்கடையில் இறங்கினார். சார்லஸ் ஏ.எஃப்.டி மில் புதருக்குள் நுழைந்தார். மில்லை லீசுக்கு கேட்டார். என்று அறிக்கைகள் வெளிவந்தன. அறிக்கைகளில் மசாலா போதாது என்று சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, கொலை நடக்கிறது, கஞ்சா விற்கிறது, ரெஸ்டோபரில் கொலை, குழாயில் அழுக்கு தண்ணீர் வருகிறது என்று சில பிட்டுகளை சேர்த்து அறிக்கை கொடுத்து வருகிறார்.

அலுவலகம் திறப்பது, பரிசுப் பொதி தருவது, பணக்கவர் வழங்குவது என்று சார்லஸ் மார்ட்டின் வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறார். "நீங்கள் தேர்தலுக்குப் பிறகு பாஜகவில் இணைவீர்களா? " என்று ஒருவர் கேட்க, "மத்தியில் ஆளுகிற அரசை கண்டித்தான் மாநில அரசு காரியங்களை சாதிக்க வேண்டும். நான் அங்கு செல்ல மாட்டேன். இங்குதான் இருப்பேன் என்றால் கதைக்கு ஆகாது. எனவே மத்தியில் ஆளுகிற அரசை சார்ந்து தான் எனது அரசியல் பயணம்" என்று தன்னை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்த பாஜகவை நோக்கி நைசாக கை நீட்டி இருக்கிறார் சார்லஸ் மார்ட்டின். 

"நீங்கள் மண்ணின் மைந்தரா? இவ்வளவு காலம் எங்கிருந்தீர்கள். புதுச்சேரி மீது உங்களுக்கு என்ன திடீர் அக்கறை?" என்று சிலர் எழுதிக் கொடுத்ததை சார்லஸ் மாற்றினிடம் பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கும் சரியான பதில் அளித்திருக்கிறார் சார்லஸ் மார்ட்டின். "இதுவரை பாண்டிச்சேரியில் எத்தனை வருடம் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் இதை அவர்களிடம் கேட்டீர்களா? நான் இன்னும் புதுச்சேரியில் அமைச்சர் பதவியும் எம்எல்ஏ பதிவையோ வகிக்கவில்லை. மக்கள் பணி செய்கிறேன். வெற்றி தோல்வி எனக்கு முக்கியமில்லை. "என்று வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் சார்லஸ் மார்டீனின் வாயிலிருந்து  இப்படி வார்த்தைகள் வந்து விழுகின்றன.

புதுச்சேரியில் சார்லஸ் மார்ட்டின் மூலம் பணப்புழக்கம் எக்கச்சக்கமாக அரசியல் களத்தில் கசியவே அது பல்வேறு கட்சிகளுக்கு பயத்தை உண்டு பண்ணி இருக்கிறது. ஆங்காங்கே தற்போதைய எம்எல்ஏக்கள் வருங்காலத்தில் தேர்தலில் நின்று ஜெயிக்க ஆசைப்படுபவர்கள் ஆளாளுக்கு பாய், தலையணை, ஸ்டவ், சிமிலி விளக்கு, குக்கர் என்று தர ஆரம்பித்து விட்டனர். "இருக்கிற நிலையைப் பார்த்தால் தேர்தலுக்கு முன்பாக சரக்கு அடிக்க சைட் டிஷ் வாங்க கூட இவர்கள் தயாராக இருப்பார்கள்" என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கி இருக்கின்றன.

புதுச்சேரியில் தன்னை எதிர்த்த நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாமிநாதன், சாய் சரவணகுமார், மாநில பாஜக தலைவர் ராமலிங்கம் ஒவ்வொருவருக்கும் விதவிதமான ட்ரீட்மெண்ட்களை கொடுத்து வருகிறார் முதல்வர் ரங்கசாமி! புதுச்சேரியில் தனக்கு கட்டுப்பட்டு இருந்தால்தான் ஓரிரு அதிகார இருக்கையில் அமர முடியும்.

புதுச்சேரி பொருத்தவரை தான் மட்டுமே பவர் சென்டர்! ஒன்று தான் சொல்வதைக் கேட்டு ஆட்சியில் பங்கு கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது என்னை அனுசரித்து மாநிலத்தில் உங்களது வர்த்தக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.  என் செல்வாக்கை அழித்துவிட்டு நீங்கள் புதுச்சேரியில் முளைக்கவே முடியாது" என்பதை பாஜக தலைமையின் பொட்டில் அடித்தார் போல சொல்லாமல் சொல்லி இருக்கிறார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் தனித்தது ஆட்சியமைக்கும் எண்ணத்துடன் காலூன்றிய பாஜகவை தந்திரமாக பாடம் செய்து மியூசியத்தில் பொருந்தியிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி! 2026 சட்டமன்றத் தேர்தலில்   பாஜக பல்வேறு அவதாரங்களில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. பாஜக வேட்பாளர்கள், லாட்டரி வியாபாரி சார்லஸ் மார்ட்டின் வேட்பாளர்கள்,  கவர்னர் கைலாசநாதனின் ஆசியுடன் அரசு அதிகாரி சத்தியமூர்த்தி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 4 விதமாக பாஜக அவதரித்து தேர்தல் களமாட ஆயத்தமாகியிருக்கிறது. 

முழுசாக இருந்த பாஜகவை முதல்வர் ரங்கசாமியின் சித்து விளையாட்டு 'சிதறு தேங்காயாக' தெறிக்க விட்டிருக்கிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்  காங்கிரசிலிருந்து வேட்பாளர்களை உருவி என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, சுயேச்சை என்று ரங்கசாமி நிற்கவைத்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடமிருந்தும், காங்கிரஸிடமிருந்தும், வேட்பாளர்களை உருவி ரங்கசாமி களம் காணவிருக்கிறார். 

ரங்கசாமி பார்முலாவால் அன்று காங்கிரஸ், இன்று பாஜக கட்சி சுக்குநூறாகி யிருக்கிறது. 2021 தேர்தலில் இந்திய கூட்டணியை ரங்கசாமி உடைத்த சூத்திரம், 2026 சட்டமன்றத் தேர்தலில் இன்னும் உக்கிரமாக வெளிப்பட்டிருக்கிறது. 2026 தேர்தலுக்குப் பின், புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ கூட தேறுவார்களா என்பது சந்தேகமே!