புதுச்சேரியில் ஆட்சி- திமுக திட்டம்!
-நேர்மறைப் பார்வை!
புதுச்சேரியில் திமுகவானது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நியமித்த தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் வழிகாட்டலில், " ஓரணியில் புதுச்சேரி" என்ற கோஷத்தோடு உறுப்பினர் சேர்க்கையை புதுச்சேரி திமுக, தொடங்கியிருக்கிறது. இது திமுக தலைமையின் வியூகத்தோடு புதுச்சேரியில் வெற்றியைத் தருமா?
இந்த உறுப்பினர் சேர்க்கை உண்மையில் மாநில மக்களிடம் இருந்து செழிப்பான உறுப்பினர்களைக் கொடுக்குமா? அல்லது வழக்கம் போல், புதுச்சேரி திமுக தலைவர்களுக்கு கட்டுப்பட்ட "விதைக் கிடங்கிலிருந்து" தேர்வு செய்யப்படுமா?
அப்படி இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்தால், அது புதுச்சேரியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எண்ணப்படி நேர்மறை விளைவினை அளித்து விடுமா?
இந்த கேள்விக்கு விடை காண வேண்டுமெனில், யதார்த்த நிலவரத்தைக் கூறியாக வேண்டும். 'கோழி சீய்க்காமல்' அதற்க்கு இரை கிடைத்து விடாது. அதுபோல், புதுச்சேரி திமுக தற்போதைய நிலை குறித்த யதார்த்தத்தை கட்சித் தலைமை கூறாய்வு (Dissection) செய்ய வேண்டும்.
கடந்த 2021 க்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்த திமுக அந்த வாய்ப்பை 90% முழுமையாக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தின் வலுமிக்க இந்த வாய்ப்பை புதுச்சேரியின் 30 தொகுதிகளின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்திருக்கலாம்.
அந்த வகையிலாவது திமுக கிராம, நகரங்களில் வசிக்கும் புதுச்சேரி ஜனங்களிடம் போய் சேர்ந்திருக்கும். மக்கள் 2021 இல் தந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இந்த நான்கு வருடங்களில் மண்டி போட்டபடி நடமாடியிருந்தால் கூட பலர் உண்மையாக விரும்பி அக்கட்சியில் இணைந்திருக்கக் கூடும்!
ஆக, எதிர்கட்சியிலிருந்தும் தன கடமையை செய்ய திமுக தவறி விட்டது. இதை எதிர்கட்சித் தலைவராக இருந்த சிவா சில காம்ப்ரமைஸ்களுக்காக செய்யவில்லை என அக்கட்சியினர் சமூக வலைத்தளங்களில் கூவிக் கூவி ஓய்ந்து விட்டனர். கையிலிருந்த 6 சட்டமன்றத் தொகுதியையாவது கட்சி பேனரில் சிவா வலுப்படுத்தியிருப்பாரா என்பதும் கேள்விக்குறிதான்!
இந்த 6 எம்.எல்.ஏக்களும் அவரவர் தொகுதியின் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டாலே போதும் என்கிற 'மன முதிர்ச்சியில்' உள்ளனர். அப்படியானால், 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த 6 தொகுதியாவது மீளுமா? அல்லது ஜெகத்ரட்சகனின் மேஜிக்கால் புதுச்சேரியை ஆளுமா? இதற்க்கு நேர்மை, உண்மையாக சொல்லப்போனால், "சாரி..நோ கமெண்ட்ஸ்" என்று நகர்ந்து விடலாம்.
மாநில கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் இடையே இப்படி ஒரு பதட்டம் நீடித்தது என்றால், அதை வேடிக்கை பார்த்தது வந்த சாமான்ய மக்களுக்கு என்ன தோன்றும்? கடந்த தேர்தலில் ''திமுக ஆட்சியைப் பிடிக்காவிடில் மரணதேவி!" என்று சபதமெடுத்த ஜெகத்ரட்சகன், இந்தத் தேர்தலில் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்.
''விஐபி சூட் அரசியல் புதுச்சேரிக்கு பொருந்தாது. அடுப்பங்கரை வரை போய் குழம்பு சட்டியை திறக்கும் அளவுக்கு இறங்கி வரவேண்டும்'' என்று ஜெகத்ரட்சகனிடம் யார் சொல்லுவது? புதுச்சேரியின் "அண்டர்ஸ்டாண்டிங் வேட்பாளர்" கொள்கையும் ஜெகத்ரட்சகனுக்கு விளங்குமா என்பது புதிர்தான்!
சரி அனைத்தும் புரிந்து விட்டதாகவே இருக்கட்டும். தொகுதி உடன்படும் வெற்றி பெறட்டும். எதிர்க்கட்சி கதாபாத்திரத்தை 4 வருடங்களாக "பாச்சைக் கட்டியை போட்டு, டிரங்க் பெட்டியில்" வைத்திருந்த புதுச்சேரி தி.மு.க. 2026 சட்டமன்றத் தேர்தலில் அணிந்து மக்களை சந்தித்தால், அது பொருந்துமா? மக்கள் அதை ரசிப்பார்களா?
தேர்வு அறை முன்பு நின்று மனப்பாடம் செய்கிற மாணவன் போல நிற்கிறது புதுச்சேரி திமுக. வரும் தேர்தலில் "பாஜக, என்.ஆர். காங்கிரஸ் வாய்ப்பாடுக்கு" என்ன மதிப்பெண் கிடைக்கும்? அரசின் மீது திமுகவின் விமர்சனத்தை வாக்காளர்கள் கடந்து போகத்தான் செய்வார்கள்? தேர்தலுக்கென திமுகவின் அஜெண்டா என்ன? முதலில் இப்போதிருக்கிற எம்.எல்.ஏக்களுக்குத் தெரிய வேண்டாமா? அந்த எம்.எல்.ஏக்கள் குறைந்தது தங்களின் தொகுதி கட்சிக்காரர்களுக்கு கூறியாக வேண்டுமே? அதற்குப்பிறகு கட்சிக்காரர்கள் வாக்காளர்களின் மூளையை சலவை செய்ய அவகாசமில்லையே?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏக்களும், உண்மையில் கட்சி பலத்தால் வெற்றி பெற்றிருப்பார்களா? பாவம்! காங்கிரஸுக்கே அந்தத் தேர்தலில் 'டிகிரி' வாங்கியது. 2016 தேர்தலுக்குப்பின் 5 வருடங்கள் முழுமையாக ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கு 2021 தேர்தலில் வெறும் 5 எம்.எல்.ஏக்களே கிடைத்தனர்.
இதில் லாஸ்பேட்டை வைத்தியநாதன் எம்.எல்.ஏ, ரியல் எஸ்டேட்டில் சம்பாதித்ததை, தொகுதி மக்களிடம் பிளாஸ்டிக் சேர், ஷாமியானா, சவப்பெட்டி, பாத்திரங்கள் என்று வரியிறைத்திருந்தார்.என்.ஆர்.காங்கிரசில் சீட் கிடைக்காததால், சுயேட்சை முடிவெடுத்த அவரை சமரசம் செய்து காங்கிரஸ் வேட்பாளராக்கினர். ஆக இவரும் சொந்த செல்வாக்கில் ஜெயிக்க, காங்கிரஸ் மார்தட்டிக் கொண்டது.
மாஹி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டு 42% சத விகிதம் வாக்கு பெற்று எம்.எல்.ஏ. ஆன ரமேஷ் பரம்பத் பற்றி எழுதி இந்த கட்டுரையை வீணாக்க விரும்பவில்லை. ஆக, தனி செல்வாக்கில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 2021 ரேங்க் நிலையில்தான் இப்போதும் உள்ளனர். இதில் 2026 தேர்தலில் ஜெயிப்பது யார் என்பதையும் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகனால் கூற முடியாது.
காரணம், 2026 தேர்தலில் திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் வெற்றி அல்லது வெற்றி, தோல்விக்கு காரணம் கட்சியாக இருக்காது அவர்கள் மட்டுமே காரணமாக இருப்பார்கள். இதில் ஜெகத்ரட்சகன் வந்து "நியூரோபியான்" ஊசி போட்டு என்ன ஆகிவிடப் போகிறது? இங்கிருப்பவர்கள் சொல்வதை அவர் தலைமையிடம் சொல்லிவிட்டு தொழிலை கவனிக்கப் போய் விடுவார்.
கடந்த 2026 தேர்தலில் முதல்வர் ரங்கசாமி, நமச்சிவாயம், இதர எம்.எல்.ஏக்கள், சுயேட்சைகளை காங்கிரஸ் மீதான அதிருப்தி, எரிச்சல், பழி உணர்வு, கோபமே ஜெயிக்க வைத்தது. அந்த தேர்தலிலும், இந்த தேர்தலிலும் மேற்கண்டவர்களை தனி மனித செல்வாக்கு வெற்றி பெற வைக்கவில்லை.
அது உண்மை என்றால் ஏனாம் தொகுதியில் மல்லாடி கிருஷ்ணராவ் பில்டப்பையும் மீறி, முதல்வர் ரங்கசாமி, புதியவர், இளைஞர், சுயேச்சை கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸா அசோக்கை அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கலாமே? ஏன் தோல்வி கிடைத்தது?
கடந்த 2021 தேர்தலில் திமுகவுக்கு கூட்டணிக் கட்சி காங்கிரஸ் செல்வாக்கு சரிவு பெரும் சவாலாக இருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.கவின் 6 எம்.எல்.ஏக்களும் தனிமனித செல்வாக்கால் மட்டுமே ஜெயித்தனர். அதுவும் காங்கிரஸ் மீதான அதிருப்தி சுனாமியில் தப்பித்ததே பெரிய சாதனை! இப்போதும் அதே நிலை. ஆனால் சற்று வித்தியாசம்!
அன்று காங்கிரஸ்..இன்று சாட்சாத் திமுக! காரணம், கிடைத்த எதிர்கட்சித் தலைவர் பதவியை அக்கட்சி பயன்படுத்தவேயில்லை என்கிற அதிருப்தி மக்களிடம் இருக்கிறது. இதை செலவின்றி எளிதாக எதிரணி பிரச்சாரம் செய்யும். இதற்கு திமுகவால் என்ன பதிலடி கொடுக்க இயலும்? பாஜக, என்.ஆர். காங்கிரசை வரும் தேர்தலில் திமுக விமர்சித்தால் அது தேசிய ஜனநாயக கூட்டணிக்கே அமோக வெற்றியைக் கொடுத்து விடும்.
வரும் தேர்தலில் சீட் கிடைத்த திமுகவினர் அதே தனிமனித செல்வாக்கு, ஓட்டுக்கு பணம் தவிர, பாஜகவின் பிரச்சாரத்துக்கு, நெருக்கடிக்கு பாதுகாப்புக் கவசத்தோடு வாக்கு கேட்டு சென்றாக வேண்டும். இதை திமுக எப்படி எதிர்கொள்ளும்? இதை ஒரு கற்பனைக் கேள்வியாகவே வைத்துக் கொண்டாலும், திமுக எப்படி இதை சமாளிக்கும்?
எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருந்த சிவாவிடம் இக்கேள்விக்கு என்ன பதில் இருக்கும்? சரி, முதல்வர் ரங்கசாமியை எதிர்க்கவில்லை. போகட்டும்! அவர் நல்ல மனிதர். ஆனால், அரசியல் ரீதியில் பாஜகவை எதிர்த்து சிவா எத்தனை போராட்டங்களை நடத்தியிருப்பார்?
அதுவும் போகட்டும்! தமது கட்சி எம்.எல்.ஏக்களை, கட்சி நிர்வாகிகளை சுதந்திரமாக செயல்பட விட்டாரா? இந்தக் கேள்விக்கு அவரிடம் நேர்மையான பதில் கோபமாகக் கூட வெளிப்பட்டால், வரும் தேர்தலை அவர் சமாளிக்க பாதி பலம் பெற்று விட்டதாக அர்த்தம்!
காரணம், திமுக எம்.எல்.ஏக்களுக்கு அவரவர் தொகுதியிலிருந்த எதிர்க்கட்சிகள் பிரச்னையில்லை. ஆனால், மாநில அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவாதான் பிரச்னையாக தென்பட்டிருக்கிறார். இதைச் சொல்லக் கூட அக்கட்சியினர் தயக்கம் காட்டினார்.
இது சிவா மீதான மரியாதையா? அல்லது பயமா? இந்தக் கேள்விக்கு விடை நிச்சயமாக சிவாவுக்குத் தெரியும்! வரும் தேர்தலில் பாஜக சுயமாக, என்.ஆர். கூட்டணி, சார்லஸ் அணி, சுயேட்சைகள் என்று பிரிந்து நின்று களத்தில் காலூன்றும். தேர்தலுக்குப் பின் செஸ் விளையாட்டின் கோப்பையை டெல்லியிலிருந்தே விமானத்தில் எடுத்து வந்து லாஸ்பேட் மைதானத்தில் இறங்கும்.
வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் தாக்கம், தனி மனித செல்வாக்கு, அன்றைய பிரச்சார உத்தி போன்றவற்றால் முடிவு செய்யப்படலாம். ஆனால், இதை உறுதி செய்யும் ஒரே சக்தி கட்சியின் தலைவரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான்!
தேர்தலுக்கு முன்னதாக புதுச்சேரி திமுகவினரை கட்சித்தலைமை அழைக்க வேண்டும். ஒரே ஒருநாள் செலவிட்டு, புதுச்சேரி மாநில தலைமையின் தலையீடு, குறுக்கீடு, இன்றி கட்சிக்காரர்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.
குறிப்பாக புதுச்சேரி திமுக தலைமையிடம் இருந்து அச்சம், தயக்கம், மிரட்சியுடன் தள்ளி நின்று 4 வருடங்களை நகர்த்திய அக்கட்சியின் சீனியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்க தலைமை அனுமதிக்க வேண்டும். குறிப்பாக சீனியர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவகுமார், உள்ளிட்ட ஏ,எம்,எச்.நாஜிம் மற்றும் எம்.எல்.ஏக்களை தனித்தனியே விசாரித்தால் தற்போதைய நிலவரம் புலப்படலாம்! .
இந்த ஆய்வு முடிவு மாநில தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சிவாவுக்கு எதிரானதாகவோ, பாதகமானதாகவோ இல்லாமல், சின்ன எச்சரிக்கையோடு, கட்சியினரை "டியூனிங்" செய்ய உகந்த சாதக விளைவாக இருக்க வேண்டும்.
இது உண்மையில் நடந்தால், ஜெகத்ரட்சகன் வரவின்றி, மாநில தலைவர்கள், நிர்வாகிகளின் சுதந்திர களப்பணியோடு, முக்கியமாக தற்போதைய புதுச்சேரி காங்கிரசின் தயவின்றி திமுக நிச்சயம் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடிக்கும்!
-தம்பி மாரிமுத்து.