THAMBI MARIMUTHU
Sep 05 2025
புதுச்சேரி அரசியல்
நட்பு என்றால் நட்பு அப்படி ஒரு நட்பு! புதுச்சேரி சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் R. கமலக்கண்ணன், A.M.H. நாஜிம் எம்எல்.ஏ., எதிரெதிர் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் விரல் நீட்டி ஆவேசமாக விவாதிப்பார்கள். அனல் பறக்கும் தரவுகளோடு இருவரும் மோதிக் கொள்வார்கள்.
சட்டமன்ற விவாதம் முடிந்து உணவுக்காக கிளம்புவார்கள். " மரைக்கான்.. இன்னைக்கு என்ன சாப்பாடு?" - என்று கமலக்கண்ணன் வினவுவார்.
"உனக்குப் பிடிச்சத நீ சொல்லு...கண்ணா! எது வேணாலும் சாப்பிடலாம்" என்பார் நாஜிம்.
சாப்பிட்டு முடித்ததும் புதுச்சேரி உப்பளம் சுற்றுலா கெஸ்ட் ஹவுஸில் ஆளுக்கொரு பேப்பரும் பேனாவுமாக உட்காருவார்கள். காரைக்காலில் நீர்ப்பாசனம், குடிநீர், மருத்துவமனை, சாலை, மின்விளக்கு, காவலர் நியமனம், நகராட்சி ஊழியருக்கான சம்பளம், தினக்கூலி ஊழியர் பணி நிரந்தரம், உரம், பூச்சி மருந்து, ஸ்ப்ரேயர், ஆர்ட்டீசியன் போர்வெல் போன்ற பிரச்சனைகளை பட்டியலிடுவார்கள்.
உப்பளம் கெஸ்ட் ஹவுஸில் இருந்து இருவரும் தனித்தனி பைக்குகளில் கிளம்புவார்கள். சட்டமன்ற கூட்டம் துவங்கும். எதிரெதிரே அமர்ந்து கொள்வார்கள். காகிதத்தில் எழுதப்பட்ட அம்சங்களை குறிப்பிட்டுப் பேசுவார்கள்.
முதல்வர் மற்றும் அமைச்சர்களை பார்த்து கோரிக்கை, வேண்டுகோள், வற்புறுத்தல், வலியுறுத்தல், என பல்வேறு பரிமாணங்களில் முழுங்குவார்கள். காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கிளம்பி சென்று சட்டசபையில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்காக எந்த பாராட்டையும் எதிர்பாராமல் குரல் கொடுத்த நட்சத்திர அரசியல்வாதிகளாக இந்த இருவரையும் குறிப்பிடலாம்.
கல்விக் கால நட்பு அரசியல் நட்பாக உருமாறி, 90-களில் தேர்தல் களம் கண்டு இருவருமே வெற்றி பெற்று சட்டமன்றம் சென்ற நிகழ்வுகள் மதுரமான அனுபவங்கள். இருவரும் என்னதான் அமைச்சர் பதவி வகித்தாலும், காரைக்கால் வளர்ச்சி என்ற அம்சங்களுக்கு ஈடாக எதையும் அவர்கள் சமரசம் செய்து கொண்டதே இல்லை. இதற்காக இருவருக்கும் புதுச்சேரி அரசியல்வாதிகளிடமிருந்து வெளியில் கூற முடியாத அவமதிப்புகள், விமர்சனங்கள் விஸ்வரூபமாய் எழுந்து அடங்கியதுண்டு.
வலிகளை மறைத்து, வாஞ்சையாய் புன்னகைத்து, ஒவ்வொரு வீட்டு கதவுகளையும் தட்டி மக்களின் எளிய ஜன்னல்களை திறந்து வித்தகர்கள் இவர்கள். கடந்த 40 ஆண்டு கால அரசியலில் காரைக்கால் வளர்ச்சிக்காக குரல் கொடுத்ததற்கு இவர்கள் சார்ந்த கட்சியோ, தலைவர்களோ, தொண்டர்களோ, அல்லது பொதுவான காரைக்கால் மக்களோ பாராட்டி ஒரு விழாவை கூட நடத்தியதில்லை.
நல்லவர்களை அலட்சியப்படுத்துவது காரைக்கால் வாக்காளர்களுக்கு கைவந்த கலை. திடீர் அக்கப்போர், திடுக்கிடும் சம்பவங்கள், திகில் முடிவுகள், திகைப்பூட்டும் திருப்பங்கள் கொண்ட அரசியல் காரைக்காலை மேக வெடிப்பாய் ஆக்கிரமித்து இருக்கிறது.
அரசியல் சூறாவளியில் இருவரின் பயணங்கள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும், இன்று வரை நட்பின் அடி ஆழத்தில் ஓடிக்கொண்டிருக்கும் "உயிரோட்டமான ஒரு புரிதல்" அவர்களை 40 ஆண்டுகால அரசியலில் வலுவாக நிலை நிறுத்தி இருக்கிறது.
நேற்று முன்னாள் அமைச்சர் R.கமலக்கண்ணன் பிறந்தநாள் நிகழ்வில், தனது பரிவாரங்களோடு சென்று அவரை ஆரத்தழுவி, வாழ்த்தி மகிழ்ந்து திரும்பி இருக்கிறார் A.M.H. நாஜிம் M.L.A.,
இது காரைக்காலிலிருந்து துவங்கும் புதுச்சேரியின் புதிய அரசியல் மாற்றத்துக்கான இன்னும் ஒரு அச்சாரம் என்று இரு தரப்பின் ஆதரவாளர்களும் பூரிப்போடு பார்க்கின்றனர்.
இந்தியா கூட்டணியில் பயணிக்கிற இருவரும் காரைக்காலில் சீனியர் தலைவர்களாக திகழ்கின்றனர். ஆறு தொகுதிகளாக இருந்த போதும் சரி, அது ஐந்தாக குறைந்த போதும் சரி! தேர்தல் வியூகங்களில் இந்த இருவர் உருவாக்கிய "அரசியல் ரசாயன மாற்றங்கள்" புதுச்சேரியில் அரசுகளை நிர்மாணித்திருப்பதை அரசியல் புரிந்த எவராலும் மறுக்க முடியாது.
R. கமலக்கண்ணன், A.M.H. நாஜிம் இருப்பது இந்தியா கூட்டணியில் தான். அதே நேரம் தற்போதைய முதல்வர் ரங்கசாமியின் குட் புக்கில் இருவரும் இடம் பெற்று இருப்பதை அரசியல் நுட்பம் உணர்ந்தவர்கள் ஒப்புக்கொள்ளவே செய்கின்றனர்.
வினோதமான புதுச்சேரி மாநில அரசியல் கண்காட்சியில், ராட்சத ராட்டின தொட்டிகள் போல, மேலும் கீழுமாய் உயர்ந்து எழும்பும் மக்கள் செல்வாக்கு அசுரத்தனமான மாற்றங்களை உருவாக்குகின்றன.
இந்த மாற்றத்தின் விளைவுகள் நல்ல திறமையும், அனுபவமும், தரமும் மிக்க தலைவர்களை சட்டமன்றத்திற்கு கொண்டு போய் கொண்டு போய் சேர்ப்பது காலத்தின் கட்டாயம் எனலாம். "மக்களுக்கு பிடிக்காத தலைவர்கள்" என்கிற பட்டியல் உருவாகி, இந்த நிகழ்வுக்கு கிரியா ஊக்கியாக அமையக்கூடும்.
நேரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த R.கமலக்கண்ணன், A.M.H. நாஜிம் இருவரின் நட்பு சில காலம் சிலரால் புகைச்சலாய் எழுந்தது. கால ஓட்டத்தில் இது மீண்டும் தீப்பிழம்பாய், கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருக்கிறது. இந்த "தீயின் வெளிச்சம்" காரைக்கால் மாவட்டத்திற்கு நல்ல விடியலை தருமா?