புதுச்சேரி தேர்தல் 2026
.
சர்வகட்சி சிண்டிகேட்டின்
''ப்ளீச் பாஜக" ஆபரேஷன்!
.
''புதுச்சேரியில் இந்த முறை பாஜக மருந்துக்கு கூட வெற்றி பெறக் கூடாது. கூட்டணி என்கிற அளவில் கூட புதுச்சேரிக்குள் இருக்கக் கூடாது. என சர்வகட்சிகளின் சிண்டிகேட் ஒன்று கூடி பாஜகவை தனிமைப் படுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநில அந்தஸ்து, நியமன உறுப்பினர்கள் நியமனம், ராஜ்யசபா எம்பி நியமனம், வாரிய தலைவர்கள் நியமனம் அனைத்திலும் புதுச்சேரி மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டதாகவே இந்தியா கூட்டணி பிரச்சாரம் செய்து வருகிறது.
கூட்டணி கட்சியான என்.ஆர். காங்கிரஸுடன் நேர்மையான ஒரு உறவை பாஜக பராமரிக்கவில்லை. என் ஆர் காங்கிரசின் கூட்டணியில் பாஜக இருந்த போதும், தன்னை ஒரு முதலாளித்துவ சக்தியாகவே காண்பித்துக் கொண்டது.
கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகமாய், முதலில் கூட்டணி, ஆட்சியில் பங்கு, முதல்வர் பதவிக்கு குறி, மாற்று சக்தி மூலம் ரங்கசாமிக்கு குடைச்சல் என்று சகல அஸ்திரத்தையும் பாய்ச்சியது.
ரங்கசாமி இதை சமாளிக்க என்னதான் வளைந்து, நெளிந்து ''பாம்பு டான்ஸ்'' ஆடினாலும், பாஜக அரசு புதுச்சேரியை பொறுத்தவரை ஒருதலைப் பட்ச முடிவையே எடுத்து வந்தது.
இந்த அனுபவம் கடந்த 15 வருடங்களாகவே காங்கிரஸ் மற்றும் என் ஆர் காங்கிரஸுக்கு நீடித்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு புதுச்சேரியின் சர்வ கட்சி தலைவர்களும் திட்டம் தீட்டினர். இந்த சிண்டிகேட்டில் காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ் காட்சிகள் முதன்மை வகித்தன. கடந்த சில வருடங்களாக இந்த நடவடிக்கையை சத்தமின்றி நகர்த்தியும் வந்து,அதை செயல்படுத்தியும் காட்டி விட்டனர்.
இப்போது பாஜக புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக எதிரணிகளில் மத்தாப்பு பறக்கின்றன. திட்டமிட்டபடி இந்தியா கூட்டணி, என். ஆர். காங்கிரஸ், திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை தனிமரம் ஆக்கி உள்ளனர்.
2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தில் பாஜக சற்று ஓவராகவே தலையீடு செய்தது. உள்துறை அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பதவியை கேட்டு பெற்றது. ஆனாலும், எப்படியாவது ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கி, முதல்வர் இருக்கையை கைப்பற்றி விட வேண்டும் என அக்கட்சி துடித்தது.
அடிப்படையில் வழக்கறிஞரான முதல்வர் ரங்கசாமி தனது அனுபவம், சாதுரியம், ராஜதந்திரம் மூலம் பாஜகவின் அனைத்து தில்லாலங்கடி வேலைகளையும் சமாளித்து வந்தார். இறுதி கட்டமாக தனக்கு உரித்தான பாணியில் காங்கிரஸ் மற்றும் திமுகவில் B டீமை உருவாக்கினார். அவரது திட்டப்படி பாஜகவிலும் B டீம் உருவானது.
மேற்படி கட்சிகளின் அனைத்து அசைவுகளும், முடிவுகளும் B டீம் மூலமாக ரங்கசாமியை வந்து சேர்ந்த வண்ணம் இருந்தன. முடிந்தவரை பாஜகவுடன் கூட்டணி தவிர்ப்பது, தனித்து நிற்பது என்ற முடிவில்தான் ரங்கசாமி இருந்தார்.
சமீபகாலமாக பாஜக எம்எல்ஏக்கள், ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் சுயேட்சைகள் மூலம் பாஜக ரங்கசாமிக்கு தலைவலியை உருவாக்கியது. "இது போதாது" என்று கேரளாவில் லாட்டரி தொழில் ஈடுபட்டு வந்த லாட்டரி வியாபாரி சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் இறக்குமதி செய்யப்பட்டார்.
காமராஜ் நகர் தொகுதியில் நலத்திட்ட உதவி என்ற பெயரில் உள்ளே நுழைந்த சார்லஸ் மார்ட்டின், படிப்படியாக நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, பாகூர் போன்ற தொகுதிகளிலும் காலடி வைத்தார். மேலும் காரைக்காலில் ஒரு தொகுதியிலும் ஆட்களை உருவாக்கினார்.
இதைவிட சார்லஸ் மார்ட்டின் செய்த காரியம் ரங்கசாமிக்கு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளுக்குமே பிடிக்கவில்லை.
கட்டுக்கட்டாக பணத்தை கொண்டு வந்து புதுச்சேரியில் கொட்டினார். அரசு அதிகாரிகள், போலீசார் ,சர்வ கட்சி அரசியல் புள்ளிகளை சார்லஸ் மார்ட்டின் விலைக்கு வாங்கினார். புதுச்சேரி சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஆளும் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிக்கிற ஆந்திராவைச் சேர்ந்த ஐடி விங்கை ஏற்படுத்தினார்.
முதல்வர் ரங்கசாமி நேரடி டார்கெட் என்ற அடிப்படையில் இந்த ஐடி விங் இயங்கியது. "ஆகாத மருமகள் கைபட்டால் குத்தம் கால்பட்டால் குற்றம்" என்பதைப் போல ரங்கசாமியின் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஐடி விங் டீம் விமர்சித்து வந்தது.
பொதுப்பணித்துறை சாக்கடைக்குள் அனுமதியின்றி ஜேசிபி எந்திரங்களை இறக்கி தூர்வாரி படம் வீடியோக்களை பதிவிடுவது, பிரியாணி அண்டா கலை இறக்கி சோறு போட்டு அக்காட்சிகளை பொதுவெளியில் பரப்புவது, அடிமாட்டு விலை போகும் ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு ரங்கசாமி கண்ணன் தெரியாதபடி விமர்சிப்பது போன்ற காரியங்களில் சார்லஸ் மார்ட்டின் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக காலாவதியான மருந்து ஊழல், கோயில் நில அபகரிப்பு, போலி மருந்து ஊழல் போன்ற விவகாரங்களில் நேரடியாகவே முதல்வர் ரங்கசாமியை விமர்சித்தார். காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் கூட மேற்கண்ட விவகாரங்களில் கண்ணியமான போக்கை பின்பற்றின.
ஆனால் சார்லஸ் மார்ட்டின் கண்ணியம், மரபு என்பதை தாண்டி நாகரீகம் அற்ற முறையில் ரங்கசாமியை விமர்சித்தார்.
இதனால் பாஜக தலைமையிடம் ரங்கசாமி சீறினார். தேர்தல் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? வேண்டுமென்றால் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் இருக்கக் கூடாது என நிபந்தனை விதித்தார்.
ஆயிரக்கணக்கான கோடிகள் நன்கொடைகளை வாரி வழங்குகிற சார்லஸ் மாட்டின் பாஜகவுக்கு முக்கியமாகப்பட்டது.
ரங்கசாமியின்பாஜக தலைவர்கள் பொருட்படுத்தவில்லை. பதிலுக்கு சார்லஸ் மார்டினை மேலும் ஊக்குவித்தனர். கூடவே ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி என்பவரை பாஜக களம் இறக்கியது. இந்த சத்தியமூர்த்தி ஏற்கனவே முதல்வர் ரங்கசாமி கூடாதத்தில் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுத்துப் பார்த்த ரங்கசாமி பொங்கி எழுந்தார். போலி மருந்து மோசடி விவகாரத்தில் சார்லஸ் மார்ட்டின் முதல்வர் ரங்கசாமியை நேரடியாக கைநீட்ட, அந்த தீயானது பாஜக சார்பில் சபாநாயகராக இருந்த ஏம்பலம் செல்வத்தையும் பற்றியது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் போலி மருந்து வியாபாரிகளுடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த படங்களையும் சார்லஸ் மார்ட்டின் சமூக ஊடகங்களில் பரப்பினர்.
எதிர்க்கட்சித் தலைவர்களையும் வயது வித்தியாசம் தெரியாமல் சார்லஸ் மார்ட்டின் சாடினார். இதனால் சார்லஸ் மார்டீனை குறி வைப்பதை விட ,அவரை தூண்டி விட்டு ரசிக்கக் கூடிய பாஜகவை புதுச்சேரியில் இருந்து அகற்றி விட வேண்டும் என இந்தியா கூட்டணி பிளஸ் NR காங்கிரஸ் கட்சிகளின் ரகசிய அஜெண்டா உருவானது.
இதன் கிளைமாக்சில் பாஜகவை புதுச்சேரியில் இருந்து முற்றிலும் அகற்றிவிட்டு, பாஜக அல்லாத காங்கிரஸ் அரசு அல்லது NR அரசு அமைந்தால் போதும் என்கிற நிலைமைக்கு புதுச்சேரி சர்வகட்சித் தலைவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் ஒன்றாக நிற்கிறது.
இந்த இந்த விசித்திர மாய ஒற்றுமைக்கு காரணம் என்ன தெரியுமா? பாஜகவை புதுச்சேரியில் இருந்து சுத்தமாக வழித்து எறிவதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சியான NR காங்கிரசுக்கு இதுதான் சரியான இறுதி வாய்ப்பு எனப்படுகிறது.
லஜகவை கூட்டணியில் சேர்க்க ஆட்சேபிப்பதின் மூலமாக ரங்கசாமி கூட்டணியிலிருந்து வெளியேற எத்தனிக்கிறார். இருந்தபோதும் ரெங்கசாமியிடமிருந்து தங்களுக்கு நேர்மறை பதில் வரலாம் என பாஜக எதிர்பார்த்தது. ரங்கசாமி வழக்கம் போல, ''கோல்டன் டைம்'' பதட்டத்தை பாஜவுக்கு தந்திருக்கிறார்.
ரங்கசாமியை நிலைகுலையவைக்க தன்னால் அனுப்பப்பட்ட ஜோஸ் சார்லஸ் மார்டீனை கூட்டணிக்குலேயே நினை நிறுத்த பாஜக ஒற்றைக்காலில் நிற்கிறது. ஒருவேளை ரங்கசாமி அதே நிலையில் இருந்தால், கிளைமாக்ஸ் காட்சியாக தேர்தலில் பாஜக, லஜக, அதிமுக, பாமக கூட்டணியை கையாளும்.
தேர்தலுக்குப்பின், மெஜாரிட்டி கிடைக்காவிடில் ரங்கசாமி பாஜகவை நெருங்குவார். அல்லது பாஜக ரங்கசாமியை நெருங்கலாம். இப்படி ஒரு குழப்பத்தை எதிர்பார்த்த இந்தியா கூட்டணி தொகுதிக்கு 2 முதல் 6 வேட்பாளர்கள் வரை கையில் வைத்துக் கொண்டு களத்தில் இருக்கிறது. தொகுதி பங்கீடு என்பது இந்திய கூட்டணி நடத்தும் வழக்கமான நாடகம். 13-க்கு 17 என பேரம் படிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகமொத்தம், பாஜக ஆட்சியைப் பிடிக்க பிற மாநிலங்களில் கையாளும், அத்தனை சாஸ்திரங்களையும், புதுச்சேரியின் சர்வ கட்சி சிண்டிகேட் ஒரே திசையில் நின்று செயலிழக்க வைத்திருக்கிறது. தங்களின் கூட்டு நடவடிக்கையால் புதுச்சேரியின் தனித்தன்மையும் தப்பித்திருப்பதாகவும் இந்த சிண்டிகேட் தரப்பிலிருந்து தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
THAMBI MARIMUTHU.